Friday, March 30, 2012

மனிதனே தெய்வம்

நாம் பல பேர் கடவுளைத் தேடி அங்கும் இங்கும் அலைகிறோம். சிலர் காசி போகின்றார்கள்.சிலர் ராமேஸ்வரம் போகின்றார்கள்.. ஆனாலும் கடவுளை ஒழுங்காகப் பார்த்தார்களா என்றால் கண்டிப்பாக இல்லை. வெறும் சிலையைப் பார்த்துவிட்டு நல்ல தரிசனம் கிடைத்தது என்று சொல்பவர்களே அதிகம். இன்னும் சில பேர் அந்த கோவிலுக்கு போனேன் இந்தக் கோவிலுக்கு போனேன் ஆனாலும் கடவள் ஒன்றும் செய்யவில்லை. கடவுள் எங்கே இருக்கின்றார் என்று கடவுள் மேலேயே கோவித்துக் கொள்கிறார்கள்.

ஆனால், ஒன்றை மட்டும் எல்லோரும் எளிதாக மறந்துவிடுகிறார்கள். கடவுளுடைய உண்மையான இருப்பிடம் அதுவல்ல என்பதை. "கண்ணில் தெரியும் மனிதரில் எல்லாம் கடவுள் வாழ்கிறார். அவர் கருணை உள்ளவர்...." என்ற திரைப்பட பாடலில் கடவுள் எங்கே இருக்கிறார் என்பது அழகாகச் சொல்லப்பட்டுள்ளது. அருட்ப்ரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் கடவுளை " அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி, தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி" என்றே அழைக்கின்றார்.

இதை நம்பிரான் திருமூலரும்

படமாட பகவர்க்கொன்று ஈயில்
நடமாட நம்பர்க்கொன்று ஆகா
நடமாட நம்பர்க்கொன்று ஈயில்
படமாட பகவர்க்கு அதாமே.

என்று குறிக்கிறார்.

படம், மாடம் உள்ள கோவில்களில் உள்ள கடவுளுக்கு நாம் ஏதேனும் செய்தால் அதனால் நடமாடும் மனிதர்களுக்கு ஒன்றும் ஆவதில்லை. ஆனால், நடமாடும் கோவில்களாக உள்ள மனிதர்களுக்கு ஒன்று செய்தால் அது எல்லாம் வல்ல அந்த பரம்பொருளுக்கே செய்ததாக அர்த்தம்.

Tuesday, March 27, 2012

"திருமூலரின் தமிழ் மந்திரம்".


நம்முடைய பாரதத் திருநாடு எத்தனையோ மகான்களையும் சித்தர் பெருமக்களையும் பெற்று ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் அவர்களால் எத்தனையோ சித்து விளையாடல்கள் நடத்தப்பட்டு எண்ணற்ற பகதர்கள் பெரும்பயன் அடைந்திருக்கின்றனர். இன்றய தினம் நாம் காணும் ஒவ்வொரு கோயில்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட அவர்களால் முறைப்படுத்தப்பட்ட சக்தியின் இருப்பிடங்களாக விளங்குகின்றன. பெரும்பான்மையின அவர்களின் ஜீவ சமாதி அல்லது அவர்களின் ஜீவ சந்நித்தியம் பெற்ற இடங்களாக அறியப்படுகின்றன. உதாரணமாக பழனி போகர் பெருமானின் ஜீவ சமாதி, சிதம்பரம் திருமூலரின் ஜீவ சமாதி, சென்னிமலை பிண்ணாக்கு சித்தரின் ஜீவ சமாதி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அதுமட்டுமில்லாமல் சித்தர்கள் ஒரே ஒரு இடத்திலோ அல்லது ஒரே ஒரு ஊரிலோ சமாதி அடைவதில்லை. ஒரே சித்தர் பல இடங்களில் சமாதி ஆனதாகவும் தெரிகிறது. மச்சமுனி திருப்பரங்குன்றத்தினிலும் திருவானைக்காவினிலும் சமாதி அடைந்துள்ளதாக குறிப்புகள் உள்ளன. அதேபோல காலாங்கிநாதர் சீனாவிலும்,காஞ்சிபுரத்திலும்,சேலம் அருகில் உள்ள கஞ்சமலையிலும் ஜீவசமாதியடைந்திருக்கிறார். யாக்கோபு முனி என்ற ராமதேவர் மெக்காவிலும் அழகர்மலையிலும் ஜீவசமாதியடைந்துவிட்டார். பாம்பாட்டி சித்தர் மருதமலை, துவாரகை, விருத்தாசலம்(பழமலை)யில் ஜீவ சமாதி யடைந்திருக்கிறார்.

பதினெட்டு சித்தர்கள் என்ற வழக்கு மிக பரவலாகக் காணப்பட்டாலும் சித்தர்கள் எண்ணிக்கை எண்ணிறந்ததாகவே உள்ள்ளது. தாயுமானவர் சித்தர்கள் தொகுப்பை சித்தர் கணம் என்று குறிக்கின்றார். திரேதாயுகத்தில் ஆயிரம்பேர், துவாபார யுகத்தில் ஐந்நூறு பேர், கலியுகத்தில் மூவாயிரம் பேர் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அனேகம் கோடி என்று சட்டமுனி குறிப்பிடுகின்றார்.

தமிழ்நாட்டில் இருந்து தமிழில் நூல்கள் யாத்த சித்தர்கள் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் மாத்திரம் அல்லர். பூனைக்கண்ணர் எகிப்த்தைச் சேர்ந்தவர் என்றும், போகர் மற்றும் புலிப்பாணி சீனர் என்றும், யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்றும் கருத்து நிலவுகிறது.



எனினும் சித்துஎனப்படும் இயற்கை மீறிய ஆற்றல் கைவரப் பெற்றவர்களாகச் சித்தர்கள் இருந்தனர் என்பதை அவர்களைப் பற்றிய செய்திகள் பலவும் வலியுறுத்துகின்றன. சித்துகள் பொதுவாக எண் வகைப்படும். அவற்றை அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசாத்துவம், வசித்துவம் என்று வடமொழியில் கூறுவர். இவற்றைத் தமிழில் முறையேஅணுவைப் போல் நுண்மையாதல்’, ‘மிகப் பெரியதாதல்’, ‘மிக நுண்மையாதல்’, ‘மிக எடையாதல்’, ‘எங்கும் செல்லும் ஆற்றல்’, ‘எண்ணியது எய்தும் ஆற்றல்’, ‘எதையும் ஆக்கும் ஆற்றல்’, ‘எவரையும் தன்வயப்படுத்தும் ஆற்றல்எனக் கூறலாம்.இராமலிங்க சுவாமிகள் கரும சித்தி, யோக சித்தி, ஞான சித்தி எனச் சித்துக்களை முப்பெரும் பிரிவுகளாக்கிக் கூறுகின்றார். மரபாகச் சொல்லப்படும் எண்வகைச் சித்திகளும், தேகத்தைக் கல்பசித்தி செய்தலும் கரும சித்தி எனப்படும்.



சித்தர்களில் ஒருவராகவும் நாயன்மார்களில் ஒருவராகவும் சித்தாந்த ஆசிரியர்களில் ஒருவராகவும் உள்ளவர் திருமூலர் ஒருவரே. சித்தர்களில் முதல்வராக அகத்தியரோடு வைத்து எண்ணப்படும் தலை சிறந்த சித்தரும் திருமூலரே. என்னுடைய பாட்டனார் என்று போகரால் வணங்கப்படுவரும் திருமூலரே. சைவ சித்தாந்தத்தை தமிழில் முதலில் சொன்னவரும் திருமூலரே. திருமூலர் கைலாயப் பரம்பரையைச் சேர்ந்தவர். சித்தர்களில் முதலாமவரும் முதன்மையானவருமான சிவபெருமானிடமும் நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவர். இவர் வேளாண்குலத்தில் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரம் 3ஆம் மாதத்தில் கும்ப ராசியில் பிறந்தவர் என்று போகர் 7000 நூலில் கூறப்பட்டுள்ளது. திருமூலர் மாபெரும் தவயோகி. சிவயோகசித்தி எல்லாம் பெற்றவர். `நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்`. என்றும். ஒன்றே குலம் ஒருவனே தேவன்,” என்றும் அருளிய மகா ஞானி ஆவார். "என்னை நன்றாய் இறைவன் படைத்தான் தன்னை நன்றாய் தமிழ் செய்யுமாறே" என தண்ணார் தமிழால் ஞானத்தை உலகத்தார்க்கு வழங்கியருளிய வள்ளல். அதனால்தான் இவரை, ``நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்`என நம்பியாரூரராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையிற் பரவிப் போற்றியுள்ளார். இவரது திருவாக்கில் மலர்ந்த தமிழ் மந்திர தந்திரம் தான் திருமந்திரம். இதனை 3000 பாடல்களாக 9 தந்திரமாக திருமூலர் மொழிந்துள்ளார் எனப்படுகிறது. இவற்றை 3000 ஆண்டு தவமிருந்து ஆண்டுக்கு ஒரு பாட்டாகப் பாடினார். இவர் இராமாயண காலத்துக்கு முன்னர் சுந்தர நாதன் என்ற பெயருடன் முதல் தடவை தென்னாட்டுக்கு வந்து தில்லையில் பதஞ்சலி வியாக்கிரமர்களுடன் தனிக்கூத்து கண்டுள்ளார்.

இப்படி எல்லாவற்றிலும் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய திருமூலரையும் அவர் இயற்றிய திருமந்திரத்தையும் தமிழ் மக்களுக்கு கொண்டு செல்லும் புதிய தொடர் தான் "திருமூலரின் தமிழ் மந்திரம்".

இனிமையாக பேசுவதே கடவுளை வணங்குவது போலத்தான்

கடவுளை வணங்குவதற்கு பல வழிமுறைகள் உள்ளன. பெரிய பூஜைகள் பண்ணுவது, புனித நதிகளில் நீராடுவது, நீண்ட பயணங்கள் மேற்கொள்வது என்று பல வழிகளில் நாம் கடவுளை வணங்க அல்லது அவரின் அன்புக்கு பாத்திரமாக அல்லது எல்லோரும் சொல்வதுபோல் புண்ணியம் பெற ஏதேதோ செய்கிறோம் ... விரும்பியும்.. விரும்பாமலும்.. ஆனால் நம்முடைய திருமூலர் பெருமான் சொல்லுகின்ற மிக எளிமையான வழியைப் பாருங்கள்.

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.

நாம் ஒரு பெரிய மனிதரைப் பார்க்கப் போகும்பொழுது வெறும் கையோடு போவதில்லை.. ஏதேனும் பழங்கள் அல்லது மாலை கொண்டு செல்கிறோம்.. ஏன் குழந்தைகளைப் பார்க்கப் போகும்பொழுது கூட ஏதேனும் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டுதான் போகிறோம். அது போல கடவுளைப் வணங்கப் போகும்பொழுது அது சிறிய கோவிலாக இருக்கலாம் அல்லது பெரிய கோவிலாகவும் இருக்கலாம் , சும்மா வெறும் கையோடு போகக்கூடாது. அதற்காக தேங்காய், பழம், மாலை எல்லாம் கொண்டு போக வேண்டும் என்று திருமூலர் சொல்லவில்லை. குறைந்த பட்சம் ஒரு இலையை கொண்டு போங்கள் என்கிறார். என்ன இலையா? என்று நீங்கள் கேட்பது எனக்கு தெரிகிறது. ஆம் இலை தான்.. பிள்ளையாருக்கு அருகம்புல்..முருகனுக்கு அத்தி.. சிவனுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அம்மனுக்கு வேம்பு என்று ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு இலை உண்டு.. அதையாவது கொண்டு சென்று வணங்குங்கள் என்று மூலர் பெருமான் கூறுகிறார்.

சரி.. அது என்ன பசு? வாயுறை ? அடுத்த படியாக அதே பாடலின் இரண்டாம் அடியில் அவர் சொல்லுவதை பாருங்கள்..
நாம் பார்க்கின்ற மனிதர்கள் அல்லாத மற்ற உயிரினங்களின் மீது அன்பு செலுத்த சொல்கின்றார். பசுவிற்கு ஒரு வாய் புல்லாவது கொடுங்கள் என்கிறார். நம்முடய மனதில் மற்ற உயிர்கள் மீது அருள் இல்லைஎனில் எப்படி கடவுளுக்கு நம் மீது அருள் வரும்? அதனால் நம்மோடு வாழ்கின்ற நாம் பார்க்கின்ற வாயில்லா ஜீவன்கள் மீது அன்பு செலுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஒரு கைப்பிடி புல்லையாவது கொடுங்கள் என்கிறார் நம்பிரான் திருமூலர்.
"எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணி வாழ அருள் செய்வாய் பராபரமே" - தாயுமானவர்

நாம் கண்ணில் காண முடியாத ஜீவராசிகளைப் பற்றி யோசிக்க வேண்டாமா? உண்ணும் பொழுது ஒரு ஓரமாக சிறிதளவு உணவை ஒதுக்கி வையுங்கள்.. அல்லது உண்ணுவதற்கு முன் கொஞ்சம் உணவை வெளியே தாழ்வாரத்தில், முற்றத்தில், அல்லது வாசலில் எங்காவது வைத்துவிட்டு உண்ணுங்கள்.. அந்த ஒரு பருக்கையாவது கண்ணுக்கு தெரியாத ஜீவ ராசிக்கோ அல்லது குறைந்தது காகம், அணில், எறும்பு என்று எதாவது ஒரு ஜீவனுக்கோப் போய் சேரும்.

சரி, மனிதனுக்கு ஒன்று இல்லையா ( அதைப் பற்றி பின்பு இன்னும் ஒரு பாடலில் காண்போம் ) இந்த பாடலின் கடைசி வரியில் நம் திருமூலர் அதையும் பேசுகிறார். சக மனிதர்களுக்கு பொன் பொருள் கொடுத்து காப்பாற்ற வேண்டாம். அவர்களுக்கு வேண்டியதை செய்து அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டாம்.. வேறு என்ன தான் செய்வது? இனிமையாகப் பேசினாலே போதும் .. இனிமையான நல்ல சொற்களுக்குதான் இன்று பஞ்சமாய் இருக்கின்றது. இதை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் நம் சித்தர் பெருமான். கொடும் சொற்களைப் பேசி மற்றவர் மனதைப் புண்படுத்தாமல் இனிமையான வார்த்தைகளை பேசினாலே போது அதுவே கடவுளுக்கு பக்கமாக செல்லும் வழி என்று நான்காம் அடியில் சொல்லுகின்றார் திருமூலர்.
"தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு" - திருவள்ளுவர்

நான் பிறந்த ஊரைப் பற்றி ( பிறந்த ஊர் கொடைக்கானலாக இருந்தாலும் என் நினைவு தெரிந்த நாட்களில் வளர்ந்த வாழ்ந்த ஊர் பழைய மதுரை மாவட்டம் இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம்) கொஞ்சம் அசை போட்டு பார்க்கிறேன்.

சோலையும் நதியும் இயற்கையின் கொடையாக ஊர் முழுதும் பரவி கிடக்கும்.

ஊரின் நடுவே வராக நதி. கொடைக்கானல் பகுதியில் பிறந்தாலும் பெரியகுளம் மக்களுக்காக வாழும் நதி. நதியின் வழியே ஊரின் மேற்கு நோக்கி நடந்தால் இரு புறமும் மாந்தோப்புகளும்,தென்னம்தோப்புகளும். நிறைய பேர் கண்டிப்பாக இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படம் பார்த்திருப்பீர்கள் . அதில் சூர்யா ஒரு ஆற்றின் கரையில் இருக்கும் ஆலமரத்தின் விழுதுகளைத் தொங்கிக்கொண்டு ஆடி தண்ணீருக்குள் மூச்சு பேச்சில்லாமல் விழுவார். அந்த இடம், அந்த ஆறு தான் எங்கள் பெரியகுளம் முருகன் கோவில் அருகில் உள்ள வராக நதி..l அதே படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவர். அது தான் முருகன் கோவில் ( நாங்கள் வழக்கமாக அழைக்கும் பெரிய கோவில்). நடிகை சங்கீதாவும், சூரியாவும், விக்ரமும் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிடும் இடம் தான் பெரியகோவில் ஆற்றுப் படித்துறை . ( எல்லாம் திரைப்படத்தை வைத்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.)
இயக்குனர் பாலாவும் பெரியகுளத்துகாரர் தான்.. அதனால் தான் அந்த படம் முழுதும் பெரியகுளம் வரும்.

பெரியகுளத்தின் மேற்க்கே தீர்த்த தொட்டி என்று ஒரு குளம் இருக்கிறது ( அதையும் பாலா காட்டியிருக்கிறார்) அதில் குளிப்பதற்காகவே நாங்கள் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் கூட்டமாக செல்வதுண்டு. இன்னும் மேற்க்கே சென்றால் இயற்கை அன்னையின் அரசாங்கம் தான். அதை எழுத்தில் சொல்ல முடியாது..

பெரிய குளம் அமைந்த இடமாகையால் இந்த ஊரும் பெரியகுளம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது. இது இலக்கிய வழக்கில் குளந்தை என்றும் குளந்தை மாநகரம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

பெரியகுளத்தின் ஆன்மீக பெருமை மிகப் பெரியது

பெரியகுளம் முருகன் கோவில் தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில். இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் தெரியும்.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக் கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திரசோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான். இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் இலிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில்என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது.

.அருணகிரிநாதரால் திருப்புகழில் இடம்பெற்ற பெருமையையும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திரா சோழ விநாயகர் கோயில் இந்த பெரிய கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயிலாகும். பெரியகுளம் நகரில் காளத்திநாதர் ஞானாம்பிகை கோயில், சொக்கநாதர் மீனாக்ஷி கோயில், வைத்தியநாத சுவாமி தையல்நாயகி கோயில் என்று சிவ பெருமானின் முக்கிய மூர்த்தங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. ஜெயவீர மகிரிஷி என்ற சித்தரின் ஜீவா சமாதி இத்திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நகரின் வடகரையில் மௌன சுவாமிகள் சமாதியும் மடாலயமும் அமைந்துள்ளன.

சொந்த ஊரைப் பற்றிய பதிவு.. சொந்த ஊர் பற்று துறவிக்கும் உண்டு என்பது பழமொழி ..