Tuesday, March 27, 2012

நான் பிறந்த ஊரைப் பற்றி ( பிறந்த ஊர் கொடைக்கானலாக இருந்தாலும் என் நினைவு தெரிந்த நாட்களில் வளர்ந்த வாழ்ந்த ஊர் பழைய மதுரை மாவட்டம் இன்றைய தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம்) கொஞ்சம் அசை போட்டு பார்க்கிறேன்.

சோலையும் நதியும் இயற்கையின் கொடையாக ஊர் முழுதும் பரவி கிடக்கும்.

ஊரின் நடுவே வராக நதி. கொடைக்கானல் பகுதியில் பிறந்தாலும் பெரியகுளம் மக்களுக்காக வாழும் நதி. நதியின் வழியே ஊரின் மேற்கு நோக்கி நடந்தால் இரு புறமும் மாந்தோப்புகளும்,தென்னம்தோப்புகளும். நிறைய பேர் கண்டிப்பாக இயக்குனர் பாலாவின் பிதாமகன் திரைப்படம் பார்த்திருப்பீர்கள் . அதில் சூர்யா ஒரு ஆற்றின் கரையில் இருக்கும் ஆலமரத்தின் விழுதுகளைத் தொங்கிக்கொண்டு ஆடி தண்ணீருக்குள் மூச்சு பேச்சில்லாமல் விழுவார். அந்த இடம், அந்த ஆறு தான் எங்கள் பெரியகுளம் முருகன் கோவில் அருகில் உள்ள வராக நதி..l அதே படத்தில் நடிகை சிம்ரன் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவர். அது தான் முருகன் கோவில் ( நாங்கள் வழக்கமாக அழைக்கும் பெரிய கோவில்). நடிகை சங்கீதாவும், சூரியாவும், விக்ரமும் பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிடும் இடம் தான் பெரியகோவில் ஆற்றுப் படித்துறை . ( எல்லாம் திரைப்படத்தை வைத்துதான் சொல்ல வேண்டியிருக்கிறது.)
இயக்குனர் பாலாவும் பெரியகுளத்துகாரர் தான்.. அதனால் தான் அந்த படம் முழுதும் பெரியகுளம் வரும்.

பெரியகுளத்தின் மேற்க்கே தீர்த்த தொட்டி என்று ஒரு குளம் இருக்கிறது ( அதையும் பாலா காட்டியிருக்கிறார்) அதில் குளிப்பதற்காகவே நாங்கள் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமையும் கூட்டமாக செல்வதுண்டு. இன்னும் மேற்க்கே சென்றால் இயற்கை அன்னையின் அரசாங்கம் தான். அதை எழுத்தில் சொல்ல முடியாது..

பெரிய குளம் அமைந்த இடமாகையால் இந்த ஊரும் பெரியகுளம் என்ற காரணப் பெயரைப் பெற்றுள்ளது. இது இலக்கிய வழக்கில் குளந்தை என்றும் குளந்தை மாநகரம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

பெரியகுளத்தின் ஆன்மீக பெருமை மிகப் பெரியது

பெரியகுளம் முருகன் கோவில் தேனி மாவட்டத்திலேயே பெரிய கோயில். இங்கு மூலவர் சிவனாக இருந்தாலும் முருகன்தான் பிரசித்தி. எனவே இக்கோயிலை பாலசுப்பிரமணியர் கோயில் என்றால் தான் தெரியும்.

பெரியகுளம் உள்ளிட்ட பகுதியை கொண்ட நாட்டை இராஜேந்திரசோழன் ஆட்சி செய்து வந்த காலத்தில், ஓர் நாள் வராக நதிக்கரையில் உள்ள அகமலைக்கு வேட்டைக்குச் சென்றான். அப்போது, அங்கு ஒரு பன்றி தனது குட்டிகளுக்கு பால் புகட்டிக் கொண்டிருந்தது. மன்னன் அம்பினால் தாய்ப்பன்றியை வீழ்த்தினான். தாயின் நிலைகண்டு கதறிய குட்டிகள் முன்பு தோன்றிய முருகக்கடவுள், அவற்றிற்கு பால் புகட்டி பசியைப் போக்கி அருளினார். தாயைக் கொன்று குட்டிகளைப் பசியால் துடிக்கவைத்த பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கும் அருளிய முருகனின் பெருமையை உணர்த்தவும் ராஜேந்திரசோழன் அவருக்காக இக்கோயிலைக் கட்டினான். இக்கோயில் காசியில் ஓடும் புண்ணிய கங்கைக்குச் சமமாக கருதப்படும் வராகநதியின் கரையில் அமைந்துள்ளது. வராக நதியின் இருகரையிலும் நேரெதிராக ஆண் மற்றும் பெண் மருத மரங்கள் அமைந்திருக்கின்றன. இந்நதியை பிரம்ம தீர்த்தம் என்றும் கூறுவர்.

பெரியகுளத்தில் ஊரின் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் இவ்வாலயத்தில், பாலசுப்பிரமணியர் ஆறு முகங்கள் கொண்டு வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருகில் இலிங்கவடிவில் இராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி ஆகியோர் கொடி மரங்களுடன் தனித்தனி சன்னதிகளில் வீற்று அருள்பாலிக்கின்றனர். ராஜேந்திரசோழமன்னன் கட்டியதால் இக்கோயில், அப்பகுதியில் பேச்சு வழக்கில் பெரியகோயில்என்ற சிறப்பு பெயருடன் விளங்குகிறது.

.அருணகிரிநாதரால் திருப்புகழில் இடம்பெற்ற பெருமையையும் இத்திருக்கோயிலுக்கு உண்டு. நகரின் கிழக்கு பகுதியில் உள்ள வடுகபட்டி கிராமத்தில் இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இராஜேந்திரா சோழ விநாயகர் கோயில் இந்த பெரிய கோயிலோடு தொடர்புடைய மற்றொரு கோயிலாகும். பெரியகுளம் நகரில் காளத்திநாதர் ஞானாம்பிகை கோயில், சொக்கநாதர் மீனாக்ஷி கோயில், வைத்தியநாத சுவாமி தையல்நாயகி கோயில் என்று சிவ பெருமானின் முக்கிய மூர்த்தங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. ஜெயவீர மகிரிஷி என்ற சித்தரின் ஜீவா சமாதி இத்திருக்கோயிலின் வடமேற்கு மூலையில் அமைந்துள்ளது. நகரின் வடகரையில் மௌன சுவாமிகள் சமாதியும் மடாலயமும் அமைந்துள்ளன.

சொந்த ஊரைப் பற்றிய பதிவு.. சொந்த ஊர் பற்று துறவிக்கும் உண்டு என்பது பழமொழி ..

1 comment:

Tony Gladvin George said...

For your land's spiritual hereditary, it have be the hometown of Saints for ages.